8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான தேர்வு

0
119

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான தேர்வை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 3,718 பேர் எழுதினர்.
பதிவு: டிசம்பர் 16, 2019 04:00 AM
அரியலூர்,

மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொகை மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கும். அதன்படி தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எசனை அரசு மேல் நிலைப்பள்ளி, திருமாந்துறை புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னே‌‌ஷ் மெட்ரிக் பள்ளி, பாடாலூர் ஸ்ரீ அம்பாள் மெட்ரிக் பள்ளி ஆகிய 6 மையங்களில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், தா.பழூர் ஆகிய பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடையார்பாளையம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், விளந்தை-ஆண்டிமடம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு நேற்று நடந்தது.இந்த தேர்வு மாணவ-மாணவிகளுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரை 90 மதிப்பெண்களுக்கு மனத்திறன் தேர்வாகவும், பின்னர் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவு தேர்வாகவும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த இந்த தேர்வை முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், கல்வி மாவட்ட அலுவலர்கள் மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் நடந்த தேர்வை முதன்மை கல்வி அதிகாரி முத்துகிரு‌‌ஷ்ணன், கல்வி மாவட்ட அலுவலர்கள் அம்பிகாபதி (அரியலூர்), சுந்தரராஜன் (செந்துறை), பாலசுப்பிரமணியம் (உடையார்பாளையம்) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

115 பேர் வரவில்லை

இந்த தேர்வை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 568 மாணவர்களும், 956 மாணவிகளும் என மொத்தம் 1,524 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,470 பேர் தேர்வு எழுதினர். 23 மாணவர்களும், 31 மாணவிகளும் என மொத்தம் 54 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 942 மாணவர்களும், 1,367 மாணவிகளும் என மொத்தம் 2,309 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,248 பேர் எழுதினர். 27 மாணவர்களும், 34 மாணவிகளும் என மொத்தம் 61 பேர் தேர்வு எழுத வரவில்லை. 2 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 3,718 பேர் அந்த தேர்வை எழுதியுள்ளனர். 115 பேர் தேர்வு எழுத வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here