5, 8–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

0
128

சென்னை,

பள்ளிக்கல்வி துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:–

5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை பட்டியலாக தயாரித்து முதன்மை கல்வி அலுவலர்கள் கல்வித்துறைக்கு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு ஏதுவாக, ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கு 1,000 வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் மாணவர்கள் விளையாட்டு மீது ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது பெற்றோரே விளையாட்டை விரும்பாமல், மாணவர்களை படிக்க வற்புறுத்துகிறார்கள்.

மாணவர்களின் விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ரூ.76 கோடியே 42 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

அரசு பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர்கள் ஆசிரியர்களின் சேலையால் மூடி வைக்கப்பட்டுள்ளது. அதை நான் பார்த்து இருக்கிறேன். விரைவில் தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் ரூ.2,400 கோடி செலவில் அனைத்து பள்ளிகளுக்கும் ‘இன்டர்நெட் வசதி’ வழங்கப்பட உள்ளது. இதனால் அந்த கம்ப்யூட்டர்களை உடனடியாக சரிசெய்து உபயோகத்துக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–

5 மற்றும் 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும். 5–ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கும், 8–ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் என அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் கேட்கப்படும்.

எளிதாகவே வினாக்கள் இருக்கும். கல்வித்திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு நடக்கும். பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக பணிகளுக்கு ஆட்கள் குறைவாகவே உள்ளனர். இந்த காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here