45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 81 புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம் மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியீடு

0
309

சென்னை,

உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதியதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20-ம் ஆண்டு தொடங்கப்படும் என்று அமைச்சர் கடந்த ஜூலை மாதம் 2-ந் தேதி அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து கல்லூரி கல்வி இயக்குனரின் கருத்துரு பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 2019-20-ம் (நடப்பாண்டு) கல்வியாண்டில் இருந்து 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 69 இளங்கலை, 12 முதுகலை என மொத்தம் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த பாடப்பிரிவுகளை கையாளுவதற்கு முதலாம் ஆண்டுக்கு 167 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு சம்பள செலவினமாக ரூ.13 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 496-ம், 2-ம் ஆண்டுக்கு (2020-21) ரூ.11 கோடியே 85 லட்சத்து 35 ஆயிரத்து 760-ம், 3-ம் ஆண்டுக்கு (2021-22) ரூ.11 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 344-ம் நிதி ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதியதாக பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டுள்ள 45 கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் இந்த கல்வியாண்டிலேயே சேர்ந்து படிக்கும் பொருட்டு, ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்க பெறாதவர்களும், புதியதாக சேர விரும்புபவர்களும் அந்தந்த கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் சேரலாம்.

இந்த பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகளை வருகிற 31-ந் தேதிக்குள் சேர்த்திட அந்தந்த கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here