மாநில செய்திகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து அரசாணை வெளியீடு

0
303

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் 6 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

அதுபோல இந்த பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரின் பொருளாதார வசதியை கருத்தில் கொண்டும், படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கான கல்விக்கட்டணம் நீக்கப்படும்’ என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த கட்டணம்
இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் 1 முதல் 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தில் இருந்து சட்டவிதிகளின்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் இதர வகுப்பு மாணவர்கள் தவிர மற்றவர்களின் கல்விக்கட்டணத்தை அரசு வழங்குகிறது. புள்ளியியல் விவரங்களின்படி ஆங்கில வழிக்கல்வியில் 23,314 மாணவர்களிடம் இருந்து ரூ.67 லட்சம் மட்டுமே கல்விக்கட்டணமாக பெறப்படுகிறது.

தகுதி பெற வாய்ப்பு
எனவே கல்விக்கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதி மாணவர்கள் பலரும் ஆங்கில வழிக்கல்வியை பெற்று பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தகுதிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

எனவே ஆங்கிலவழியில் கல்வி பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தையும் நீக்கிவிடலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

6 முதல் 12 வரை
பள்ளிக் கல்வி இயக்குனரின் இந்த முன்மொழிவை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்க அரசு முடிவு செய்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12–ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி முறையில் படிக்கும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதில்லை என்று உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here