மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் புழு, பூச்சிகள் கிடந்ததால் பள்ளி முற்றுகை

0
386

மஞ்சூர்,

மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜாரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பிக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளான சிவசக்தி நகர், பாரதியார் புதூர், குந்தா கோத்தகிரி, முள்ளிகூர், ஆடா உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார். இங்கு நடப்பாண்டு முதல் ஆங்கில வழிக்கல்வியும் தொடங்கப்பட்டு உள்ளது.

இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக சாம்பாரில் புழு, பூச்சிகள் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து புகார் கூறினர். இந்த உணவை சாப்பிடும் மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் வண்டுகள், புழு, பூச்சிகள் காணப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்தர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பெற்றோர்கள் சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இதனையடுத்து தகவலறிந்த குந்தா தாசில்தார் சரவணன் விரைந்து வந்து பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மாணவ- மாணவிகளுக்கு சமையல் செய்து வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பருப்புகளில் பூச்சி, புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் அமராவதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அதிகாரிகள் இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here