மருத்துவ படிப்புக்காகமாணவிக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகைகலெக்டர் வழங்கினார்

0
141

ஆரணி தாலுகா இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி தெய்வானை. இவர்களின் மகள் தீபா (வயது 18) இவர் மருத்துவ படிப்பிற்காக ‘நீட்’ தேர்வு எழுதினார். இதில் 563 மதிப்பெண்கள் பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் கல்லூரியில் சேர அவர்களிடம் பணம் இல்லை. இதையடுத்து கல்வி உதவித்தொகை வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மாணவியின் பெற்றோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று காலை இரும்பேடு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவி தீபா மருத்துவக்கல்லூரியில் சேர தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகையை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மாணவியிடம் வழங்கினார்.

இதுகுறித்து மாணவி தீபா கூறியதாவது:-

நான் இதே பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பிடித்து கவுரவிக்கப்பட்டேன்.

அதனால் என்னை நாமக்கல்லில் உள்ள வெற்றி விகாஸ் பள்ளி நிர்வாகம் 11, 12-ம் வகுப்பில் இலவசமாக சேர்க்க முடிவு செய்து அங்கு படித்து பிளஸ்-2 தேர்வில் 1,167 மதிப்பெண்கள் பெற்றேன். பின்னர் ஓராண்டு காலம் ‘நீட்’ தேர்வுக்காக பயிற்சியும் வழங்கினார்கள். அதன் மூலம் 563 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.

ஆனால் மேற்படிப்பு படிக்க போதிய வசதி இல்லாத நிலையில், கலெக்டர் அறிக்கையை படித்து அவரிடம் உதவி கோரியிருந்தோம். இந்த உதவியானது என் உயிருள்ளவரை எங்கள் குடும்பம் மறக்காது. கலெக்டருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஆரணி உதவி கலெக்டர் இல.மைதிலி, தாசில்தார் தியாகராஜன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here