புதிய கல்வி கொள்கை பற்றி கருத்து கூற கால அவகாசம் நீட்டிப்புமத்திய மந்திரி அறிவிப்பு

0
371

புதுடெல்லி,

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைகளை அளிக்க ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்புக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கருத்து தெரிவிக்க ஜூன் 30-ந்தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த வரைவு அறிக்கை, நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பரிந்துரை செய்திருந்தது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது.

கால அவகாசம் நீட்டிப்பு

இந்நிலையில், வரைவு அறிக்கை குறித்து கருத்து கூறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், “எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தாமல், வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்ததா?” என்று கேட்டார்.

அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-

எல்லா மட்டங்களிலும், ஆலோசனை நடத்திய பிறகு, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்து கூறுவதற்கான கால அவகாசம், மேலும் ஒரு மாதத்துக்கு, அதாவது ஜூலை 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தி இயக்குனர் பதவி நிரப்பப்படும்

அவர் மேலும் கூறியதாவது:-

தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு, 2009-ம் ஆண்டில் இருந்து இருக்கிறது. ஆனால், 2014-ம் ஆண்டில் இருந்துதான் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு பலனடைந்த குழந்தைகள் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு இது 41 லட்சமாக உயர்ந்தது.

மத்திய இந்தி இயக்குனரகத்தில் காலியாக உள்ள இயக்குனர் பதவி விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here