பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்: 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

0
354

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

156 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

2,650 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத் தரப்படும்.

பள்ளிக்கல்விதுறைக்கு 163 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக, 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் .

54 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதேபோல், எரிசக்தி துறையின் கீழ் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் நிலையங்கள், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். முதற்கட்டமாக, இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தற்பொழுது இயக்கத்தில் உள்ள ஐந்து அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் தூசுகள் காற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்த, 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உபகரணங்கள் நிறுவப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள 250 உதவி பொறியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். வட சென்னை அனல் மின் நிலையத்திற்காக 150 உதவி பொறியாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்படும். தமிழ்நாடு எரிசக்தி முகமைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சொந்த கட்டிடம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here