பள்ளி, கல்லூரிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பேச்சு

0
265

சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு பொம்மலாட்ட கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் அவர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் மழைநீரை வீணாக்காமல் சேமிக்கும் வழிமுறை குறித்த துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் ஆணையாளர் சதீஷ் பேசியதாவது:-

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் அதனை உறுதி செய்வதுடன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரிக்க வேண்டும். பருவமழை காலங்களில் விளையாட்டு மைதானம் மற்றும் வெளிவளாக பகுதிகளில் தேங்கும் மழை நீரை சேமிப்பதற்காக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முன்வர வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளும் போது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எளிதில் சென்றடையும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள், உழவர் சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர் பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, உதவி தலைமை ஆசிரியர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், நித்யா, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here