‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது – கலெக்டர் பேச்சு

0
336

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் எம்.பி.யான எஸ்.முருகையனின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் டென்னிஸ் பயிற்சி மைய திறப்பு விழா நேற்று நடந்தது. செயலாளரும், தாளாளருமான அருள்விழிகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவர் சீனிகார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி, பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி குழும தலைவர் கருணாநிதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி, மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் முத்துவேல், நிர்வாக இயக்குனர் காயத்ரி, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-

நமது மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படுவது குறைந்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வியுடன் கூடிய விளையாட்டு மிகவும் அவசியம். விளையாட்டு ஒருவரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். மனவலிமையையும் தரும். எனவே, மாணவர்களுக்கு உடற்கல்வி அவசியமானதாக கருதப்படுகிறது. புத்தகக்கல்வி ஒரு புறம் இருந்தாலும் விளையாட்டில் திறமையை காண்பித்தால் வாழ்வில் உயரலாம்.

விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்ல ஒரு வீரனை ஆயத்தப்படுத்தும் இடம் பள்ளி தான். விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு பல சலுகைகள் கொடுக்கிறது.

‘நீட்’ தேர்வை கண்டு அஞ்சிய நாட்கள் கடந்து போய் தற்போது அதை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. கிராமப்புற மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். நாம் படிக்கும் புத்தகக்கல்வியை தரமானதாக, நன்றாக படித்தாலே எல்லா போட்டி தேர்வுகளிலும் எளிதில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டது. விழாவை ஆசிரியர்கள் சீனுவாசன், விபிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், தலைமை பயிற்சியாளர் கோபி, உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மகேந்திரபாபு, மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here