தேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்வகுப்பறைகள் இல்லாததால் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலைமை

0
273

ஆம்பூர் அருகே தேவலா புரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதற்கு முன்பு இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. அப்போது மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இங்கு 1000 பேர் வரை படிக்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் தங்கம் பரிசாக வழங்குகிறது.

மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இப்பள்ளி பொதுத்தேர்வில் சாதனை படைத்து வருகிறது. சென்ற கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 136 மாணவர்கள் தேர்வு எழுதி 129 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95 சதவீத தேர்ச்சி ஆகும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 126 பேர் எழுதினர். இதில் 111 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88 சதவீத தேர்ச்சி ஆகும்.

இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி விகிதத்தில் சாதனை படைக்கும் பள்ளியாக விளங்குவதால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், வகுப்பறை வசதி போதுமானதாக இல்லை. 6முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் ஏற்கனவே உயர்நிலைப்பள்ளியாக இருந்த பழைய கட்டிடத்திலும், 11 மற்றும் 12-ம் வகுப்புகள் மாணவ, மாணவிகள் அங்கிருந்து சற்று தூரத்தில் அரசு புதிதாக கட்டிய கட்டிடத்திலும் படித்து வருகின்றனர். அரசு கட்டிய புதிய பள்ளி கட்டிடம் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகளுக்கு பழைய பள்ளியில் 3 கட்டிடம் உள்ளது. அதில் ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து கைப்பிடி எதுவும் இல்லாமல் மாடியில் ஒரு வகுப்பறை இயங்கி வருகிறது. இங்கு செல்லும் மாணவ,மாணவிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் மற்றொரு கட்டிடத்திற்கு செல்லும் படி மிகவும் மோசமான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.

இவ்வளவு மோசமான கட்டிடங்களை கொண்ட இப்பள்ளியில் 6ம் வகுப்பில் 176 மாணவமாணவிகளும், 7-ம் வகுப்பில் 125 மாணவமாணவிகளும், 8-ம் வகுப்பில் 158 மாணவமாணவிகளும், 9-ம் வகுப்பில் 178 மாணவ,மாணவிகளும், 10-ம் வகுப்பில் 132 மாணவ,மாணவிகளும் என மொத்தம் 379 மாணவர்களும், 390 மாணவிகளும் என 769 பேர் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு 17 வகுப்பறைகள் இருக்க வேண்டும். ஆனால் 13 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் 4 வகுப்பறை மாணவர்கள் தினமும் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் மண் தரையில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய அவலநிலை உள்ளது.

மேலும் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் உட்கார இடமும், பாடம் நடத்த கரும்பலகை எதுவும் இல்லாமல் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டி உள்ளது. மழைக்காலங்களில் மாணவர்களை ஒரே அறையில் உட்கார வைக்க வேண்டிய நிலை உள்ளது.

இதைவிட கொடுமையானது அப்பள்ளியில் கழிப்பறை என்பது மொத்தமே 3 மட்டுமே உள்ளது. இதில் மாணவிகளுக்கு 2 கழிப்பறையும், மாணவர்கள் ஒரு கழிப்பறையும் பயன்படுத்தி வருகின்றனர். 769 பேர் படிக்கக்கூடிய இடத்தில் வெறும் 3 கழிப்பறை மட்டுமே உள்ளதால் மாணவிகளும், மாணவிகளும் படுவேதனையை சொல்லி தெரியவேண்டியது இல்லை. மேலும் இருக்கும் கழிப்பறையும் மிகவும் மோசமாகவும், பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது.

மேலும் இருக்கும் கழிப்பறையை சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. தனியார் மூலமே வாரத்திற்கு ஒருமுறையோ, மாதத்திற்கு ஒரே ஒரு முறையோதான் சுத்தம் செய்கின்றனர். இதனால் கழிப்பறைக்கு செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. ஆசிரியர்களுக்கும் கழிப்பறை வசதி கிடையாது.

பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாத காரணத்தால் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது. பள்ளியில் இருக்கும் 3 கட்டிடங்களும் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். இதனால் அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டினால் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாடி கட்டிடம் கட்டினால் அதிக அளவில் வகுப்பறைகளும் கிடைக்கும். மேலும் இதேபோல் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறையும் கட்ட முடியும்.

மேலும் இப்பள்ளி மாணவர்களுக்கு என்று விளையாட்டு மைதானம் கிடையாது. அருகே உள்ள பாலாற்று பகுதிக்கு சென்றுதான் மாணவர்கள் விளையாட வேண்டி உள்ளது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இப்பள்ளியில் நீண்டநாட்களாக காலியாகவே உள்ளது. இதனால் இப்பள்ளியில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களால் எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. விளையாட்டு அட்டவணையில் மாணவர்களுக்கு தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதேபோல் இப்பள்ளிக்கு இரவு காவலர் பணியிடமும் காலியாக உள்ளது.

அரசு பள்ளியில் சிறந்து விளங்கும் தேவலாபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளை ஏற்படுத்தி கொடுக்கவும், கழிப்பறை வசதியை ஏற்படுத்தவும், உடற்கல்வி ஆசிரியரையும் நியமிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்விக்காக அரசு பல கோடி ரூபாயை வழங்கி வரும் சூழ்நிலையில் மாணவர்களை அதிகம் கொண்ட இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க முன்வரவேண்டும் எனவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் பொதுமக்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here