தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

0
482

மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை புதிதாக கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் ரவிசங்கர், மாவட்ட செயலாளர் ஜெய்சிங் மற்றும் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல கோவை பீளமேட்டில் உள்ள கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் கருப்பு பட்டை அணிந்து வகுப்புகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். மருத்துவ கல்லூரி முன்பு நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் ரவிசங்கர் கூறியதாவது:-

5 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுதினால் தான் எம்.பி.பி.எஸ். முடித்ததாக கருதப்படும். இந்த தேர்வு தேவையற்றது. கம்யூனிட்டி ஹெல்த் என்ற புதிய படிப்பை தேசிய மருத்துவ ஆணை­யம் கொண்டு வந்துள்ளது. இது தகுதி இல்லாத படிப்பாகும். இதனால் பல குழப்பங்கள் ஏற்படும். எனவே குழப்பங்களை ஏற்படுத்தும் இத்தகைய படிப்புகளை அறிமுகப்படுத்தக் கூடாது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக அரசியல்வாதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் அதில் டாக்டர்கள் யாரும் இடம் பெறவில்லை. அந்த ஆணையத்தில் டாக்டர்களும் இடம் பெற செய்ய வேண்டும். எனவே தேசிய மருத்துவ ஆணையத்தில் மேற்கண்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் அந்த அமைப்பின் டாக்டர்கள் நேற்றுக்காலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவை கிளை வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் கோவையில்உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here