தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்

0
224

பெரம்பலூர்,

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னாள் உதவி இயக்குனர் தம்புசாமி, தமிழறிஞர்கள் சுந்தரம், முத்தரசன், பாரதி ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘வெல்லட்டும் தமிழ்‘ என்கிற தலைப்பில் கவிதை போட்டியும், ‘இனியொரு விதி செய்வோம்‘ என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும், தமிழ் சார்ந்த 10 தலைப்புகளில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதேபோல அரியலூர் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகத்தின் உதவியாளர் புவனேஷ்வரி தலைமையில் நடந்தது.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதற்பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர். மாநில போட்டி தொடர்பான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

இதேபோல பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனலட்சுமி சீனவாசன் கல்லூரியிலும், அரியலூர் மாவட்டத்திற்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் போட்டிகள் நடக்கிறது என்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here