கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் கல்வித்தொகையாக ₹ 303.70 கோடி வழங்கப்பட்டுவிட்டது – பள்ளிக்கல்வித்துறை

0
126

கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வித்தொகையாக 2018 – 2019 ம் கல்வியாண்டில் 303.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை எதிர்த்தும்,2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21ம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கல்வி செலவுத் தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கமளிக்கவும், மூன்று ஆண்டுகளுக்கான தொகையை ஆறு வாரங்களில் வழங்கி அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் முனுசாமி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், அரசு பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கு செலாவகும் தொகை அல்லது கல்வி கட்டண நிர்ணயக் குழு தனியார் பள்ளிகளுக்கு கட்டணமாக நிர்ணயிக்கும் தொகை, இவற்றில் எது குறைவோ அதனை அடிப்படையாக கொண்டே கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் நிதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 – 2019 ம் கல்வியாண்டை பொறுத்தவரை அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக வழங்க வேண்டிய 303.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும், 2019 – 2020 ம் கல்வியாண்டை பொறுத்தவரை தற்போது தான் அரசு பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இனி தனியார் பள்ளிகள் அரசிடம் கோரியுள்ள கட்டண விகிதங்கள் சரிபார்க்கப்பட்டு அதற்கான உரிய தொகை விடுவிக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here