கரூரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு: மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் அன்பழகன் கலந்துரையாடல்

0
231

கரூரில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டது. இதையடுத்து இந்த கல்லூரியை நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியது. இதையடுத்து முதலாமாண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். முதலாமாண்டு மாணவ- மாணவிகளை கைக்குலுக்கி வரவேற்று வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சிறப்பான உள்கட்டமைப்புடன் அனைத்து வசதிகளுடன் அமையப்பெற்றுள்ள இந்த அரசு மருத்துவக்கல்லூரியின் முதல் மாணவர்களாக சேர்ந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் நாளை நல்ல மருத்துவர்களாக உருவாகப்போகிறீர்கள். மனித உயிர்களைக் காப்பாற்றும் ஒப்பற்ற சேவையை நீங்கள் மேற்கொள்ள உள்ளர்கள்.

ரூ.6 கோடியில் எம்.ஆர்.ஸ்கேன்

சிறந்த மருத்துவ அலுவலர்கள் உங்களுக்கு பேராசிரியர்களாக இருந்து வழிநடத்த உள்ளார்கள். நீங்கள் அனைவரும் எதிர்காலத்தல் சிறந்த மருத்துவர்களாக உருவாகி ஏழை எளிய மக்களுக்காக சேவையாற்றிட வேண்டும். கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஸ்கேன் கருவிகள் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அனைவரின் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா, மருத்துவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here