ஏம்பல் தொடக்கப்பள்ளிமாணவ, மாணவிகளுக்கு ‘ஸ்கைப்’ மூலம் அமெரிக்காவில் இருந்து பாடம்1-ந் தேதி முதல் நடத்தப்படுகிறது

0
362

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் உள்ள பின்தங்கிய பகுதியான ஏம்பலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்டமாக ஏம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மேம்பாட்டு பணிகள் செய்து, மேஜை, நாற்காலிகள் வாங்கி கொடுத்தனர். பின்னர் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு தேவையான 6 கம்ப்யூட்டர் மற்றும் மேஜைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. அதற்கான அறையில் கேமரா மற்றும் எல்.இ.டி. டி.வி., வகுப்பறை முழுவதும் ஸ்பீக்கர் வசதி ஆகியவை செய்யப்பட்டது. இணையதள இணைப்பும் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க சிறப்பு ஆசிரியர் மற்றும் யோகா கற்றுக்கொடுக்க யோகா ஆசிரியர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் வகுப்புகளில் மாணவ, மாணவிகள் தனித்தனி குழு போன்று அமர்ந்து, கலந்துரையாடி கல்வி பயின்று வரு கின்றனர்.

தற்போது மாணவ, மாணவிகளுக்கு நுண்ணறிவு கல்வி(ஸ்மார்ட் வகுப்பு) நடத்த, முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து வாரத்திற்கு 2 நாட்கள் கம்ப்யூட்டர் வகுப்பு, 3 நாட்கள் ஆங்கில கல்வி என அமெரிக்காவில் உள்ள தன்னார்வலர்களை கொண்டு ‘ஸ்கைப்‘ மூலம் வருகிற 1-ந் தேதி முதல் பாடம் நடத்தப்படுகிறது. ஏம்பல் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை அமெரிக்காவில் இருந்து பாடம் நடத்துபவர்களும், அங்குள்ளவர்களை மாணவ, மாணவிகளும் கண்டு பாடம் பயிலும் வகையில் அனைத்து வசதிகளும் ஏம்பல் தொடக்கப்பள்ளியில் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மற்றும் நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஏம்பல் ஊர்ப்புற நூலக உறுப்பினர்களாக, அதற்கான கட்டணத்தை முன்னாள் மாணவர்கள் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ஏம்பல் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.3.21 லட்சம் செலவு செய்து உள்ளனர். முன்னாள் மாணவர்களின் முயற்சியால் இந்த ஆண்டு 25 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த பள்ளியில் 97 மாணவ, மாணவிகள் பயிற்று வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்க தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 ஆசிரியைகள் மற்றும் 3 தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தனியார் பள்ளிகளை விட இப்பள்ளியில் அனைத்து வசதிகளும், தரமான கல்வியும் கிடைப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here