எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் – பறக்கும் படைக்கு, அரசு உத்தரவு

0
372

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு பணிகளில் ஈடுபடும் பறக்கும் படை உறுப்பினர்களின் நியமனம் மற்றும் கடமைகள் குறித்து அரசு தேர்வுத்துறை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நல்ல அனுபவமும், நேர்மையும் கொண்ட ஆசிரியர்களை பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை சோதனையிட பெண் ஆசிரியர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

அடிக்கடி புகார்வரும் தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேசமயத்தில் பணியின்போது தேர்வர்களை அச்சம் அடைய செய்யும் வகையில் செயல்படக்கூடாது. சந்தேகத்துக்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதனை செய்தால் போதும். அனைவரையும் சோதிப்பது அவசியமற்ற ஒன்று. தவறுகளை கண்டுபிடிக்கும்போது, விருப்பு, வெறுப்பு இன்றி கடமையாற்ற வேண்டும். ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் அன்றைய தினத்தின் தேர்வை எழுத முடியாது. அதற்கு அடுத்ததாக வரும் தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம். ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு அவர்கள் செய்த தவறுகளின் அடிப்படையில் தண்டனை அளிக்க வேண்டும்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பதிந்து, அரசுத் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here