ஊராட்சி பள்ளி ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

0
353

அறந்தாங்கி அருகே காராவயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் அறந்தாங்கி அருகே உள்ள வாராப்பூரை சேர்ந்த ஆசிரியை அன்புமணி கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்தது முதல் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வந்தார். இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் ஆசிரியைக்கு நல்ல மதிப்பு உருவானது. இந்நிலையில், ஆசிரியை அன்புமணியை திடீரென வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தங்களது பிள்ளைகளை, ஆசிரியை அன்புமணி வருகைக்கு பிறகு, ஊராட்சி தொடக்கப்பள்ளி குழந்தைகள் நல்ல முறையில் படிப்பதை கண்டு தங்களது குழந்தைகளையும் சேர்த்ததாக பெற்றோர்கள் கூறினர். தற்போது ஆசிரியை மாற்றத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து நேற்று அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில், ஆசிரியை அன்புமணியை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்த வேண்டும் எனக்கூறி பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் அருள் மற்றும் நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here