இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டதை கண்டித்து – டாக்டர்கள் வேலை நிறுத்தம்

0
107

கடலூர்,

மருத்துவ கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவின்படி இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்படுகிறது. இதை கண்டித்தும், தேசிய மருத்துவ ஆணையத்தின் சில ஷரத்துக்களில் மாற்றங்கள் கொண்டு வரக்கோரியும் நாடு தழுவிய அளவில் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை (வியாழக்கிழமை) 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடலூரில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தவிர இதர அனைத்து மருத்துவ சேவைகளும் நிறுத்தப்பட்டன. பிரசவம், அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகள் மட்டும் இயங்கின. புறநோயாளிகள் பிரிவு இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து டாக்டர்கள் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கடலூர் கிளை தலைவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டாக்டர் கேசவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முகுந்தன் வரவேற்று பேசினார். பால்கி, மருதவாணன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட தலைவர் மருதுபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ஸ்டான்லி சந்திரன், ராமகிருஷ்ணன், சந்திரலாதன், ரேணுகாதேவி, ஜனாபாய், கண்ணன், அழகானந்தம், பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here