ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்பு குழு; பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

0
345

புதுக்கோட்டையைச் சேர்ந்த சவுபாக்கியவதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

புதுக்கோட்டை குலவைப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றினேன். கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். அதன்படி பணியில் சேருவதற்காக சென்றபோது, என்னுடைய இடமாற்ற உத்தரவை பெற அதிகாரிகள் தரப்பில் பணம் கேட்கப்பட்டது. ஆனால் பணம் கொடுக்க நான் முன்வரவில்லை. இதனால் என் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் முறையாக பணியாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுப்பினர். பின்னர் என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இது முன்விரோதம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. எனவே இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “பட்டதாரி ஆசிரியர் சவுபாக்கியவதி கற்பித்த வகுப்புகளில் தொடக்கக்கல்வி அதிகாரி சிறப்பு பார்வை மேற்கொண்டபோது அடிப்படையான கேள்விகளுக்கு கூட மாணவ–மாணவிகள் பதில் அளிக்கவில்லை. ஆங்கில எழுத்துகள் கூட பல மாணவர்களுக்கு தெரியவில்லை. அதேபோல பாடக்குறிப்பு, பதிவேடு உள்ளிட்டவற்றை அவர் முறையாக பராமரிக்கவில்லை“ என வாதாடினார்.

முடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக கற்பிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் உள்ளது. ஆசிரியர் பணி என்பது புனிதமானது. வகுப்பறையில் கற்பித்தல் என்பது ஒரு கலை. மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் ஆசிரியர்களின் கற்பித்தல் சிறப்பானதாகவும், பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதையும், முறையாக கற்பிப்பதையும் உறுதி செய்ய பல்வேறு விதிகள் உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய கற்றல் திறன், வாசிப்புத்திறன், எழுதும் திறன், பொது அறிவு ஆகியவற்றை அறிய வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருக்கிறது என்று கூறுவதை ஏற்க இயலாது. மிகப்பெரிய அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் ஊரகப்பகுதிகளை பின்புலமாக கொண்டவர்கள் தான்.

மாணவரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பாடம் நடத்துவது ஆசிரியரின் கடமை. இந்த வழக்கை பொறுத்தவரை தொடக்கக்கல்வி அதிகாரி கேட்டுள்ள அடிப்படை கேள்விகளுக்கு கூட மாணவர்கள் பதில் அளிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை தொடர அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் சிறப்பு குழுக்களை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அமைக்க வேண்டும்.

இந்த குழுவானது ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பள்ளிக்கல்வித்துறை வகுத்த கொள்கைகள் பள்ளிகளில் ஒழுங்காக நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யவும் குழுக்களையும் அமைக்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க நிபுணர் குழுக்களின் அறிவுறுத்தலின்பேரில் கல்விக் கொள்கையின் அடிப்படையில் வினா–விடை தொகுப்பை உருவாக்க வேண்டும். அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

தொடக்கக்கல்வியில் மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகளை செய்தல் ஆகிய திறன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதில் தவறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here