ஆசிரியரை நியமிக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகளுடன் பெற்றோர் காத்திருப்பு போராட்டம்

0
227

துறையூரை அடுத்த பெரமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 115 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள் சேர்க்கை கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.

இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு யாரும் இங்கு நியமிக்கப்படவில்லை. இதனால், எல்.கே.ஜி, யூ.கே.ஜி. மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10 நாட்களாக பாடம் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால் மாணவ-மாணவிகள் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர், எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் அதே ஊரில் உள்ள சமுதாயக் கூடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கு, அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கேயே அவர்கள் மதிய உணவு சமைத்து மாணவ-மாணவிகளுக்கு ஊட்டினர்.

இது குறித்து தகவல் அறிந்த முசிறி கல்வி மாவட்ட அதிகாரி செல்வி சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார் என்று அவர் உறுதிஅளித்தார். அதை ஏற்று பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here