தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ், ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பருவத் தேர்வுகளும் இதுவரை நடத்தப்படவில்லை. காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரையாண்டுத், தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும், அரையாண்டுத் தேர்வை, ஆன்லைனில் நடத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் மட்டும், இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டுத் தேர்வாக நடத்தாமல், மாதிரித் தேர்வாக நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.
குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வாட்ஸ் ஆப் வாயிலாக, மாதிரித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், இந்த தேர்வை நடத்தலாம் என, கல்வி அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.