அரசு தொழில்நுட்ப கல்லூரியில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. கலந்தாய்வுக்கு 8,361 பேர் விண்ணப்பம் – தரவரிசை பட்டியல் 11-ந் தேதி வெளியீடு

0
216

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்கள் ஆகியவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில், அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) நடைபெற உள்ளது. இதேபோல் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விரும்புபவர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதில், டான்செட் நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

இதன்படி இந்த ஆண்டு டான்செட் நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 8,361 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை செயலரும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறியதாவது:-

2019-20-ம் கல்வி ஆண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதில் எம்.பி.ஏ. படிப்புக்கு 6,754 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 1,607 பேரும் என மொத்தம் 8,361 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக டான்செட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வருகிற 11-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் எம்.சி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், எம்.பி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையும் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here