அரசு தொடக்க பள்ளியில் மேற்கு வங்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பெங்காலி மொழியில் பாடம் கற்பிப்பு

0
388

கரூர்,

தொழில் நகரான கரூரில் டெக்ஸ்டைல், பஸ் பாடி, கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. அதிலும் கரூரில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய கொசுவலைகளுக்கு வெளிநாடுகளில் தனி மவுசு உள்ளது. அந்த வகையில் கரூர், சணபிரட்டி, பசுபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் கொசுவலை நிறுவனங்களை மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பிழைப்புக்காக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் போது, மேற்கு வங்க தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க வழியின்றி தவித்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை ஏற்பாட்டில் அந்த குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக, சணபிரட்டி அரசு தொடக்க பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரபட்சமின்றி அரசு சலுகைகள்

தற்போது 2019-20-ம் கல்வியாண்டிலும் மேற்கு வங்க தொழிலாளர்களின் குழந்தைகள் அந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். “சமக்ரா சிக்‌ஷா அபியான்” எனும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைகள், எழுது பொருட்கள், மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பைசாகி எனும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆசிரியை, பெங்காலி மொழியில் மேற்கு வங்க குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். எனினும் தமிழ் வழிக்கல்வியும், மற்ற ஆசிரியர்கள் மூலம் சணபிரட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் மொழிகளை கடந்து 2 தரப்பு மாணவ, மாணவிகளும் ஒரே பள்ளியில் நண்பர்களாக பழகி விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வத்துடனேயே செயல்படுகின்றனர். இந்த பள்ளியில் மேற்கு வங்க தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உயர்கல்வி பயில…

தாந்தோன்றி வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கீடு செய்யும் ஒருங்கிணைப்பாளர் சுசிலாவிடம் கேட்ட போது தெரிவிக்கையில், சணபிரட்டி தொடக்க பள்ளியில் பெங்காலி மொழி குழந்தைகளுக்கு என கல்வி கற்பிக்கும் வகையில் மேற்கு வங்கத்திலிருந்து புத்தகங்கள் இங்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதன் மூலம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்பட்டு, தேர்வு வைக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளியை நிறைவு செய்த மாணவர்கள், சணபிரட்டி ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கல்வி கற்கவும் வழிவகை உள்ளது. அதே போல், தாந்தோன்றி வட்டார பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்கிற அளவில் உரிய முறையில் கணக்கெடுத்து அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here