அக்டோபரில் பள்ளிகள் திறப்பா? தமிழக அரசு முடிவு இதுதான்!

0
152

மத்திய அரசு செப்டம்பரில் பள்ளிகள் திறக்க அனுமதியளித்துள்ள நிலையில் தமிழ அரசு எடுத்துவரும் பணிகள் குறித்து முக்கிய தகவல்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதோ இல்லையோ பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாடு மெல்ல மீண்டு வருகிறது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் மட்டும் கொரோனாவுக்கு தீர்வு இல்லை என சர்வதேச மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது அதிகமாக கேட்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் குறையும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் திட்டவட்டமாக தெரிவித்து வந்த நிலையில் இந்த ஆலோசனை கவனம் பெறுகிறது.அதில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பள்ளிகளில் விருப்பத்தின் பேரில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இ பாஸ், பொது போக்குவரத்து ஆகிய விவகாரங்களில் தமிழக அரசு தற்போது பெருமளவில் தளர்வுகள் அறிவித்திருந்தாலும் ஆகஸ்ட் மாத இறுதி வரை இந்த முடிவில் இல்லை. மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் காரணமாகவே தமிழக அரசு இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி ஆகியவற்றை அமல்படுத்தியது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பிலும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு பின்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த போது, “கொரோனாவுக்கு மருத்து கண்டறியப்படாவிட்டாலும், பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது” என்று கூறினார். பாதிப்பு குறைவதாக முதல்வரே கூறிவரும் நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்கள் முறையாக கடைபிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுவதால் கொரோனா தொற்று எளிதாக பரவும் வாய்ப்புகள் உள்ளதே என சில பெற்றோர்கள் அதிருப்தியும் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் வெளியிட்ட தகவல்: இதனிடையே, அக்டோபர் 5 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். “தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. இதுதொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. வந்தால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here